சோளிங்கர் அருகே கல்லால் தாக்கி மூதாட்டி படுகொலை

சோளிங்கர் அருகே நிர்வாணமாக்கி தலையில் கல்லை போட்டு மூதாட்டி கொல்லப்பட்டார். மற்றொரு பெண்ணும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2018-03-17 22:00 GMT
சோளிங்கர், 

சோளிங்கர் அருகே உள்ள தாலிக்கால் கிராமம் ராமதாஸ் நகரை சேர்ந்தவர் தெய்வானை (வயது 65). இவரது கணவர் ஜெயவேலு ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு சரவணன் (45), சுந்தரமூர்த்தி (43), முருகேசன் (39) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். 3 பேரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

மகன்கள் தன்னை கவனிக்காததால் கதவு இல்லாத ஒரு சிறிய வீட்டில் தெய்வானை தங்கியிருந்தார். முதியோர் உதவித்தொகை மற்றும் கூலி வேலை செய்வதில் கிடைத்த பணத்தில் பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தெய்வானையை நிர்வாணமாக்கி, தலை, முகம், உடலில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். நேற்று காலை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தெய்வானை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதேபோல், அதே பகுதியில் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசிக்கும் காந்தம்மாள் (60) என்ற மற்றொரு பெண்ணையும், நள்ளிரவில் வீடு புகுந்து மர்ம நபர் கல்லால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் காண்டீபன், மகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபுணர் பாரி தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்து சிறிதுதூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

விசாரணையில், நள்ளிரவில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர் சுற்றித்திரிந்ததை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர். எனவே, அந்த நபர் கொள்ளையடிப்பதற்காக வீடுகளை நோட்டமிட்டு தனியாக இருந்த மூதாட்டி தெய்வானையை கற்பழிக்கும் நோக்கில் நிர்வாணமாக்கி கொன்றிருக்கலாம். அதைத்தொடர்ந்து, காந்தம்மாள் வீட்டிற்குள்ளும் புகுந்து அவரை தாக்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தப்பி ஓடிய அந்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

போலீசார் கூறுகையில், ‘இதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோளிங்கர் அருகே குன்னத்தூர் கிராமத்தில் 65 வயது மூதாட்டி நிர்வாணமாக்கி கொலை செய்யப்பட்டார். மேலும் ஆர்.கே.பேட்டையிலும், சித்தூரிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே, மர்ம நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்லது சைக்கோவாக இருக்கலாம். மேலும் வயதான பெண்களை கற்பழிக்கும் நோக்கில் அவர் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

இந்த சம்பவம் சோளிங்கர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்