கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

Update: 2018-03-17 21:30 GMT
தூத்துக்குடி,

கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம், தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள ஓட்டலில் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு சங்க தலைவர் ராஜகோபால், மாநில இளைஞர்- இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், 2013-ம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. 90 சதவீதம் வெற்றி பெற்றது. அதேபோல் வருகிற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். தேர்தல் வியூகம் அமைத்து செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், முன்னாள் யூனியன் தலைவர் சண்முகவேல், மேற்கு பகுதி செயலாளர் முருகன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, வக்கீல் அணி செயலாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெற்றி பெறுவது உறுதி

முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூட்டுறவு சங்க தேர்தலில், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலரும் பதவி பெற வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார். கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வினர் கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து இடங்களிலும் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். அதனால் மீண்டும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. அண்ணா உருவாக்கிய தி.மு.க.வும், எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வும் தான் இன்று வரை உள்ளது. மற்ற கட்சிகள் எதுவும் நிலைக்கவில்லை. கட்சி தலைமையின் கருத்தை கேட்காமல் கருத்து தெரிவித்ததால் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்’ என்றார்.

மேலும் செய்திகள்