குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்த திருப்பூர் யோகா ஆசிரியையின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பழகன் நேரில் ஆறுதல்

குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்த திருப்பூரை சேர்ந்த யோகா ஆசிரியையின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பழகன் நேரில் ஆறுதல் கூறினார்.

Update: 2018-03-17 22:00 GMT
மொரப்பூர்,

திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திகலா (வயது 40). யோகா ஆசிரியை. இவருடைய சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அல்லாலப்பட்டி ஆகும். சக்திகலாவின் கணவர் சரவணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு பாவனா, சாதனா என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சக்திகலா தனது குழந்தைகளுடன் தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சக்திகலா உள்பட பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவருடைய குழந்தைகள் இருவரும் காப்பாற்றப்பட்டு விட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சக்திகலா, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வேட்டுவப்பட்டியை சேர்ந்த தேவி ஆகியோர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதன் காரணமாக தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆனது. உயிரிழந்த சக்திகலாவின் உடல் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தர்மபுரி மாவட்டம் அல்லாலப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சக்திகலாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் சக்திகலாவின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் டி.ஆர்.அன்பழகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மதிவாணன், செல்வராஜ், தீர்த்தகிரி மற்றும் அ.தி.மு.க. வினர். உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்