மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: கருத்து கேட்பு கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளிநடப்பு

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருத்து கேட்பு கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2018-03-17 23:00 GMT
திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே விளாங்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முடிவு செய்தது. மணல் குவாரி அமைப்பதால் ஆற்றில் வெள்ளம் அதிகமாக செல்லும்போது கரையில் உடைப்பு ஏற்பட்டு கிராமத்துக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளதாகவும், நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கூறி கிராம மக்கள் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஆற்றில் மணல் அள்ளுவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட பொக்லின் எந்திரத்தையும் கிராம மக்கள் திருப்பி அனுப்பினர்.

இந்த நிலையில் விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பது தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் திருவையாறு தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தாசில்தார் லதா தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை சுரங்கம் மற்றும் கண்காணிப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சுப்பையன், துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர் கார்த்தீபன், கிராம நிர்வாக அதிகாரி முகமது அனிபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளாங்குடி கிராமத்தை சேர்ந்த கலையரசி, ரூபினி, சாந்தி, சுமதி, பார்வதி, திருஞானசேகர், சுப்பிரமணியன், வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், 1 மீட்டர் ஆழத்தில் மட்டுமே மணல் அள்ளப்படுவதால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீராதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மணல் லாரிகள் செல்வதற்கு தனி பாதை அமைக்கப்படும் என்றும் கூறினர். இதை கிராம மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

கிராமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மணல் குவாரியை அமைக்க கூடாது என்று கூறி விட்டு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்