திருவெண்ணெய்நல்லூர் அருகே அனுமதியின்றி குடிநீர் இணைப்பு ; அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் பொதுமக்கள்
திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலை அமைக்கும் பணியின் போது கிராம மக்கள் அனுமதியின்றி குடிநீர் குழாய் இணைப்பு அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூரில் இருந்து தடுத்தாட்கொண்டூர் வழியாக மாதம்பட்டு வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று திருவெண்ணெய்நல்லூர்-மாதம்பட்டு சாலையை புதிதாக அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் சாலை அமைப்பதற்காக அங்கு சேதமடைந்த சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் தோண்டினர். இதை பயன்படுத்தி சாலையின் ஒரு புறத்தில் பூமிக்கு அடியில் சென்ற குடிநீர் குழாயில் புதிதாக குழாய் இணைப்பு கொடுத்து அதனை சாலை வழியாக மறுபக்கத்துக்கு கொண்டு சென்று குடிநீர் பிடிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி தோண்டப்பட்ட சாலையின் நடுவில் மேலும் அவர்கள் பள்ளம் தோண்டினர்.
தொடர்ந்து சாலையோரத்தில் பள்ளம் தோண்டி அங்குள்ள குடிநீர் குழாயில் புதிய குழாயை இணைத்து தங்களது பக்கத்துக்கு கொண்டு வந்து குடிநீர் பிடித்தனர்.
இது பற்றி தகவல் தெரிந்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அனுமதியில்லாமல் பொது மக்கள் கொடுத்திருந்த குடிநீர் இணைப்பை துண்டிக்க முயன்றனர். இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அப்போது அனுமதியின்றி குடிநீர் குழாய் அமைத்தது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.