புற்றுநோயைத் தடுக்க முடியுமா?

உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது என்று இன்றுவரை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஆனால், சில வகை காரணிகளால் புற்றுநோய் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

Update: 2018-03-17 07:15 GMT
புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, மதுப் பழக்கம், அதிக உடல் எடை, பழங்களையும் காய்கறிகளையும் குறைவாக உட்கொள்வது ஆகியவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடுமாம்.

அதிலும், அதிகமான பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22 சதவீதம் பேரின் பாதிப்புக்குக் காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே.

புகைபிடிப்பது என்றில்லை, வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.

உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்குக் காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்களே என்பது ஓர் அதிர்ச்சித் தகவல்.

மனித உடலின் பல உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட்டாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு, மார்பகம் ஆகிய உறுப்புகளில்தான் பெரும்பாலும் இந்நோய் உண்டாகிறது.

நீண்டகாலம் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கும் புற்றுநோய் உண்டாக வாய்ப்புண்டு என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

சரி, புற்றுநோய் வராமல் தடுக்க முடியுமா?

மேலே குறிப்பிட்ட, புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளைத் தவிர்ப்பதுடன், கதிர்வீச்சுகள், காற்று மாசுபாடு, பாலுறவின்மூலம் பரவும் எச்.பி.வி. எனப்படும் ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ தொற்று போன்றவற்றைத் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

எச்.பி.வி. மற்றும் ஈரல் அழற்சி நோயை உண்டாக்கும் ஹெப்படைட்டீஸ் பி வைரஸ் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன்மூலம் புற்றுநோய் உண்டாவதை தடுக்க முடியும். இந்தத் தடுப்பூசிகளைப் போடுவதன் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 10 லட்சம் உயிர் களை காப்பாற்ற முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

மேலும் செய்திகள்