பாம்புகளின் தோழி!
பாம்புகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆண்களின் எண்ணிக்கை குறைவு, அதிலும் இந்த வேலையில் ஈடுபட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை இன்னும் குறைவு.;
பெங்களூருவைச் சேர்ந்த சுபத்ரா அப்படி அரிதான பெண்களில் ஒருவர்.
அங்கு எந்த வீடு, கடைக்குள் பாம்பு புகுந்துவிட்டாலும், உடனே சுபத்ராவுக்கு போன் பறக்கிறது. அவரும் விரைந்து வந்து, நாசூக்காக பாம்பை பிடித்து காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுகிறார்.
சிறுவயது முதலே சுபத்ராவுக்கு பாம்புகளைப் பற்றி அறிவதிலும், அவற்றை மீட்பதிலும் ஆர்வம் இருந்ததாம்.
“நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கு பாம்பு மீது ஆர்வம் இருந்தாலும், சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் பாம்புகளை மீட்கத் தொடங்கினேன். பாம்புகள், அவற்றின் இயல்புகள் பற்றி முழுமையாக அறிந்தபின்பே நான் இதில் இறங்கினேன். இப்பணிக்கு ஏற்ப எனது திறமையையும் வளர்த்துக் கொண்டேன்” என்று கூறும் சுபத்ரா, தான் நினைத்ததைவிட இந்த வேலை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது என்கிறார்.
“எனது பாம்பு பிடிக்கும் பயணத்தில், நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். மறைந்திருக்கும் பாம்புகளைக் கண்டுபிடிப்பது, என்னால் அவற்றுக்கும், அவற்றால் எனக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் மீட்பது என்று எனது திறமையைக் கூர்தீட்டிக் கொண்டிருக்கிறேன். பாம்புகளை மட்டுமல்ல, பாம்பு பிடிக்கும் நேரத்தில், சுற்றியுள்ள மக்கள் அச்சப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தாமல் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்றும் அறிந்துகொண்டிருக்கிறேன்” என்று சுபத்ரா விளக்கமாகச் சொல்கிறார்.
இருப்பிடப் பகுதிகளுக்குள் புகுந்துவிடும் பாம்புகள் எப்போதும் குடியிருப்புவாசிகளிடம் பீதியைக் கிளப்பிவிடுகின்றன. அதிலும் பெங்களூருவைப் பொறுத்தவரை பிப்ரவரி முதல் செப்டம்பர் வரையிலான காலம்தான் ‘பாம்பு சீசனாம்’.
பாம்பைப் பிடிப்பதற்கான அழைப்பு தொடர்பாக தான் எப்படிச் செயல்படுவேன் என்று சுபத்ரா கூறுகிறார்...
“எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தவுடனே, அது எந்த இடம், திறந்தவெளியா, உட்புறப் பகுதியா என்று கேட்பேன். திறந்தவெளி என்றால், ‘பேசாமல் விட்டுவிடுங்கள், அது தானே நழுவிச் சென்றுவிடும்’ என்பேன். மூடிய பகுதி என்றால், அதுவும் நான் கால் மணி நேரத்தில் செல்லக்கூடிய இடம் என்றால், உடனே சென்றுவிடுவேன். நான் வரும்வரை, பாம்பின் மீது ஒரு கண் வைத்திருக்கும்படியும், கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ளும்படியும் கூறுவேன். குறிப்பிட்ட இடத்தை நான் சென்றடைந்ததும், ஒரு கொக்கியைக் கொண்டு லாவகமாக பாம்பைப் பிடித்து பையினுள் போட்டுக்கொள்வேன். அங்கிருந்து கிளம்பும்முன், பாம்புகளை ஈர்க்கும் எலி நடமாட்டம் இல்லாமல் அந்தப் பகுதியை எப்படி வைத்துக்கொள்வது என்றும் குறிப்பிட்ட ஆட்களுக்கு ஆலோசனை கூறுவேன். பிடித்த பாம்பை வனப் பகுதியில் கொண்டுபோய் பத்திரமாக விட்டுவிடுவேன்.”
சுபத்ரா இந்தப் பணியை விரும்பிச் செய்தாலும், இன்னும் சில வேலைகளை ஆண்கள்தான் செய்ய வேண்டும் என்ற சமூகத்தின் பார்வை மாறவில்லை என்கிறார். பாம்பு பிடிப்பது என்றாலே அதை ஆண்கள்தான் செய்யவேண்டும் என்று எண்ணுகிறார்கள் எனச் சொல்கிறார்.
“பாம்பு பிடிப்பதற்கும் உடல் வலுவுக்கும் தொடர்பில்லை. ஆனாலும் இது ஆண்கள் செய்ய வேண்டிய வேலை என்று மக்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. நிஜத்தில், ஆண்கள் செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் பெண்களாலும் செய்ய முடியும். அந்தத் துணிவு மட்டும் பெண்கள் மனதில் இருந்தால் போதும்!” -சுபத்ராவின் குரலில் உறுதி தொனிக் கிறது.
சிலநேரங்களில் பாம்பை மீட்பதற்கு சுபத்ரா போய் நிற்கும்போது அவரைப் பார்த்துவிட்டு சம்பந்தப்பட்டவர்களின் முகம் மாறிவிடுவது உண்டாம்.
“ஆம்பளைங்க யாரையாவது வரச் சொல்லியிருக்கலாமே...?’ என்று இழுப்பார்கள். நான் அவர்களிடம், ‘கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நில்லுங்க, பாம்பு வேறிடத்துக்குள் புகுந்து கொள்ளும்முன் நான் அதைப் பிடிக்கணும்’ என்பேன்” என்று சொல்லிப் புன்னகைக்கிறார்.
அதோடு, “சில நேரங்களில், பிடித்த பாம்பை கொன்று விடத் துடித்துக்கொண்டு ஒரு கூட்டமே நிற்கும்போது, தனியொரு பெண்ணாக அவர்களிடம் இருந்து பாம்பைக் காப்பாற்றுவது கஷ்டம்தான். நல்ல பாம்பின் நச்சுப்பல்லைப் பிடுங்கிவிட்டு அதை வைத்து வித்தை காட்டிப் பிழைக்கிற பாம்பாட்டிகளும், பாம்பை தங்களிடம் கொடுத்துவிடுமாறு தொந்தரவுபடுத்துவார்கள்” என்கிறார்.
நிறைவாக, “ஓர் உயிரினத்தைக் காப்பாற்றுவது, இயற்கைக்கு நாம் செய்கிற நற்செயல். சுற்றுச்சூழல் சமன்பாட்டில் பாம்புகளுக்கும் ஒரு முக்கியப் பங்குண்டு. அதை உணர்ந்து அவற்றை வாழவிட வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை நான் தொடர்ந்து ஏற்படுத்துவேன்” என்று சொல்லி விடைகொடுக்கிறார், பாம்புகளின் தோழி சுபத்ரா.