திருமலைராஜபுரத்தில் தேர்வு மையம் அமைக்க பெற்றோர்கள் கோரிக்கை

தேர்வு எழுத ஆடுதுறை மையத்திற்கு செல்வதால் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே திருமலைராஜபுரத்தில் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-03-16 23:18 GMT
திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே உள்ள திருமலைராஜபுரத்தில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் அம்மன்குடி, வடகரை, இலந்துறை, மாங்குடி, திருநீலக்குடி, கூத்தக்குடி, மேலையூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் இங்கு வந்து படிக்கின்றனர். இதில் 147 பேர் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று முதல் எழுதுகின்றனர். இவர்கள் அனைவரும் தேர்வு எழுத ஆடுதுறையில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்லவேண்டி இருப்பதால் பள்ளியிலிருந்து 2 அரசு பஸ்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். பஸ்சில் ஆடுதுறை மையத்திற்கு செல்லவேண்டி இருப்பதால் காலை 7 மணிக்கே பள்ளிக்கு வரவேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் மாணவ, மாணவிகள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு வேகமாக வரவேண்டும் என்பதால் தேர்வு எழுதும் போது பதற்றம் ஏற்படுகிறது. தேர்வு எழுத ஆடுதுறை மையத்திற்கு பஸ்சில் செல்வதால் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அவதிபட்டு வருகின்றனர்.

திருமலைராஜபுரம் பள்ளியிலேயே தேர்வு மையம் வந்தால் நாங்கள் பதற்றம் இல்லாமல் தேர்வு எழுத முடிவும் என்று மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே திருமலைராஜபுரம் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி தேர்வு மையமாக செயல்பட அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இடம்போதாது என கல்வித்துறை அதிகாரிகள் அதனை செயல்படுத்தாமல் உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். சரியான நேரத்திற்கு வரும்படி அறிவுறுத்தியிருந்தாலும் பஸ் புறப்படுவதற்கு முன்பு ஒரு சில மாணவ, மாணவிகள் வருவதில் தாமதம் ஏற்படுவதால் தேர்வுக்கு சரியான நேரத்திற்கு அழைத்து செல்வதில் பல இடர்பாடுகள் ஏற்படுகிறது. எனவே மாணவ- மாணவிகள் பதற்றத்தை குறைக்க திருமலைராஜபுரத்தில் உடனே தேர்வு மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்