ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 26 ஆயிரத்து 935 மாணவ-மாணவிகள் எழுதினர்

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 26 ஆயிரத்து 935 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

Update: 2018-03-16 22:00 GMT
ஈரோடு, 

தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதற்காக ஈரோடு மாவட்டத்தில் 102 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஈரோடு கல்வி மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் உள்பட 12 ஆயிரத்து 596 பேரும், கோபி கல்வி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 339 பேரும் என மொத்தம் 26 ஆயிரத்து 935 பேர் தேர்வு எழுதினார்கள்.

சரியாக காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. அப்போது மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. 15 நிமிடங்கள் அவர்கள் வினாத்தாள் படித்து பார்க்க நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 10.15 மணிக்கு மாணவ-மாணவிகள் தேர்வை எழுதத்தொடங்கினார்கள். பகல் 12.45 மணிக்கு தேர்வு நிறைவடைந்தது.

முன்னதாக முதல் முறையாக பொதுத்தேர்வை சந்திப்பதால் மாணவ-மாணவிகள் ஆர்வமாக வீட்டில் இருந்து பெற்றோரிடம் ஆசி பெற்று புறப்பட்டனர். தேர்வை சிறப்பாக எழுத மாணவ-மாணவிகள் கோவில்களில் வழிபாடு, கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனை செய்து பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர். அங்கு தேர்வு தொடங்கும் வரை அவர்கள் புத்தகங்களை ஆர்வமாக படித்துக்கொண்டு இருந்தனர். இதேபோல் தனித்தேர்வர்களாக திருமணமான பெண்களும் அதிகமாக தேர்வு எழுத வந்திருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் தேர்வை கண்காணிப்பதற்காக 102 முதன்மை கண்காணிப்பாளர்கள், 102 துறை அதிகாரிகள், 1,533 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். மாற்றுத்திறனாளிகள், பார்வை திறன் குறைபாடு உடையவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக 45 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். 133 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேர்வு மையங்களுக்கு சென்று சோதனையிட்டனர்.

மேலும் செய்திகள்