கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்காததால் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்காததால் கோர்ட்டு உத்தரவுப்படி விழுப்புரம் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.

Update: 2018-03-16 22:00 GMT
விழுப்புரம்,

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வீட்டுமனைகள் மற்றும் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இதற்காக தனியாரிடமிருந்து முறையாக நிலத்தை கையகப்படுத்தி அதற்கான சந்தை மதிப்புத்தொகையை அவர்களுக்கு வழங்கி வருகிறது.

அதன்படி விழுப்புரம் குபேர தெருவை சேர்ந்த மார்த்தாண்டன் மனைவி பிருந்தா (வயது 65) என்பவருக்கு சொந்தமான 75.48 சென்ட் நிலத்தை கடந்த 1994-ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தி யது. இதற்காக ஒரு சதுர அடிக்கு 8 ரூபாய் 80 காசுகள் வீதம் அந்த இடத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக பிருந்தாவிற்கு வழங்கப்பட்டது.

ஆனால் இந்த இழப்பீட்டு தொகை குறைவாக உள்ளது. எனவே எனக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கூறி பிருந்தா, கடந்த 2007-ம் ஆண்டு விழுப்புரம் முதலாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி, ஒரு சதுர அடிக்கு 20 ரூபாய் 80 காசுகள் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்ட அந்த தொகையை பிருந்தாவிற்கு வழங்காமல் வீட்டு வசதி வாரியம் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் மனுதாரர் பிருந்தா சார்பில் வக்கீல் மகேஷ், விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்ட உரிய தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.30 லட்சத்து 69 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கவில்லையெனில், இழப்பீட்டு தொகைக்கு சமமாக வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் இருக்கும் பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என்றும் கடந்த 31.1.18 அன்று உத்தரவிட்டது. ஆனால் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் பிருந்தாவிற்கு வீட்டு வசதி வாரியம் உரிய இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை.

இந்நிலையில் நேற்று விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்திற்கு கோர்ட்டு ஊழியர் தட்சிணாமூர்த்தி, மனுதாரர் பிருந்தா, வக்கீல் மகேஷ் ஆகியோர் சென்றனர். தொடர்ந்து, அந்த அலுவலகத்தில் இருந்த மேஜைகள், நாற்காலிகள், கணினி, மின்விசிறிகள், பீரோக்கள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்