போஜ்புரி நடிகரிடம் ரூ.27½ லட்சம் மோசடி கட்டுமான அதிபர் மீது வழக்குப்பதிவு

போஜ்புரி நடிகரிடம் ரூ.27½ லட்சம் மோசடி செய்த கட்டுமான அதிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2018-03-16 22:30 GMT
மும்பை,

போஜ்புரி நடிகரிடம் ரூ.27½ லட்சம் மோசடி செய்த கட்டுமான அதிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

வீடு வாங்க பதிவு


நவிமும்பை தலோஜாவில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் போஜ்புரி நடிகர் சுதீப் பாண்டே என்பவர் 3 வீடுகள் வாங்க கடந்த 2013-ம் ஆண்டு பதிவு செய்து இருந்தார்.

இதற்காக அவர் ரூ.27 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து இருந்தார்.

அப்போது கட்டுமான நிறுவனம் சார்பில் அவரிடம் ஒரு வருடத்தில் பணி முடிந்து வீடு வழங்கப்பட்டு விடும் என கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இன்னும் கட்டிட பணிகள் முடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

கட்டுமான அதிபர் மீது வழக்கு


இதையடுத்து தனது பதிவை ரத்து செய்துவிட்டு பணத்தை திரும்ப தரும்படி அந்த கட்டிடத்தை கட்டி வரும் கட்டுமான அதிபர் முர்ஜி ரவரியாவிடம், சுதீப் பாண்டே கேட்டார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்து உள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த நடிகர் சுதீப் பாண்டே தலோஜா போலீசில் கட்டுமான அதிபர் முர்ஜி ரவரியா மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்