நள்ளிரவு நேரத்தில் டிபன் கடை நடத்தக்கூடாது என கூறியதால் போலீசாருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
போலீஸ்காரர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை ஓட்டேரி பாஷ்யம் ரெட்டி 2-வது தெருவைச் சேர்ந்தவர் சசி (வயது 44). இவர், அயனாவரம் ஆன்டர்சன் சாலையில் பஸ் பணிமனை எதிரே டீ மற்றும் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அதே பகுதி ஆஜிமுகமது அப்பாசாமி தெருவைச்சேர்ந்த பழனி (48) என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்த டிபன் கடை இரவு முழுவதும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், ஆட்டோ டிரைவர்கள், சமூக விரோதிகள் என பலதரப்பட்டவர்களும் நள்ளிரவு முதல் விடிய விடிய இந்த கடைக்கு வந்து கூட்டமாக நின்று புகைபிடிப்பதும், சாலையில் அமர்ந்து சாப்பிடுவதுமாக உள்ளனர்.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பாதிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
கொலை மிரட்டல்
இதையடுத்து துணை கமிஷனர் சியாமளாதேவி உத்தரவின்பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் ஏட்டு ராஜசேகர் மற்றும் போலீஸ்காரர் பாக்யராஜ் ஆகியோர் நள்ளிரவு நேரத்தில் அந்த டிபன் கடைக்கு சென்றனர்.
கடை உரிமையாளர் சசியிடம், சட்டவிரோதமாக நள்ளிரவு நேரத்தில் கடையை திறந்து வைக்கக்கூடாது. சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த கடை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் உடனடியாக கடையை மூடும்படி கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் சசி மற்றும் அங்கு வேலை செய்யும் பழனி ஆகியோர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அங்கிருந்த 20-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
2 பேர் கைது
இதுபற்றி தகவலறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் அரிகணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட சசி மற்றும் பழனியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
பின்னர் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் முகமது நாசர், சசி மற்றும் பழனி ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.