2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் பலம் 110 ஆக குறையும் சிவசேனா தாக்கு

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் பலம் 110 ஆக குறையும் என்று ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா தாக்கி உள்ளது.

Update: 2018-03-16 22:30 GMT
மும்பை,

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் பலம் 110 ஆக குறையும் என்று ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா தாக்கி உள்ளது.

இடைத்தேர்தலில் தோல்வி

உத்தரபிரதேசத்தில் நடந்த 2 எம்.பி. தொகுதிகளுக்கும், பீகாரில் ஒரு எம்.பி. தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சி தோல்வி அடைந்தது. இது வெற்றிகளை குவித்துவந்த பா.ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த தோல்வியை பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மகத்தான வெற்றியை பெற்றது. அக்கட்சியினர் அந்த வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் 3 எம்.பி. தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி அந்த வெற்றியின் வெளிச்சத்தை மறைத்துவிட்டது. இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 282 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 272- ஆக குறைந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா தலைமையில் அக்கட்சி தோல்வியை கண்டுள்ளது.

பலம் 110 ஆக குறையும்

முன்னதாக உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 325 இடங்களை கைப்பற்றி சாதனை புரிந்த பா.ஜனதாவால், எம்.பி. தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஜொலிக்க முடியவில்லை.

தற்போது உத்தரபிரதேச முதல்-மந்திரியாக உள்ள யோகி ஆதித்யநாத் 1991-ம் ஆண்டு முதல் ஒருமுறை கூட இடைத்தேர்தல் நடந்த கோரக்பூர் எம்.பி. தொகுதியில் தோற்றது கிடையாது. ஆனால் அவர் முதல்-மந்திரி ஆனதும் அவரது பா.ஜனதா கட்சி தோல்வியடைந்துவிட்டது. திரிபுராவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்த தெரிந்த பா.ஜனதாவால், கோரக்பூரில் ஏன் வெற்றிபெற முடியவில்லை.

இவையெல்லாம் பா.ஜனதா தனது அடித்தளத்தை இழந்து வருவதையே காட்டுகிறது. எனவே 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தங்களது இலக்கான 280 தொகுதிகளை கண்டிப்பாக எட்டிப்பிடிக்காது என்பது தெளிவாக தெரிகிறது. அந்த தேர்தலை தொடர்ந்து பாராளுமன்றத்தில் பா.ஜனதாவின் பலம் 110 அல்லது 100 ஆக குறையும்.

அழிவு காலம்

உண்மை என்னவென்றால் பா.ஜனதா தன்னை உருவாக்கியவர்களை மறந்துவிட்டு பொய்யான பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது. அவர்களின் சாணக்கியத்தனத்தை நிறுத்தாவிட்டால், கட்சிக்கு அழிவு காலம் தொடங்கிவிடும்.

பா.ஜனதா கட்சி கோரக்பூர் எம்.பி. தொகுதியை தனது ஆணவத்தாலும், அகந்தையாலும் தான் இழந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்