காஞ்சீபுரம் பகுதியில் காரில் அரிவாள்களுடன் வந்த பிரபல ரவுடி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு டிரைவர் கைது
காஞ்சீபுரம் பகுதியில் காரில் அரிவாள்களுடன் அதிவேகமாக வந்த பிரபல ரவுடி உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் காந்திரோடு பகுதியில் ஒரு கார் அதிவேகமாக தாறுமாறாக ஓடியது. இதனால் சாலைகளில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். ஒரு சில பொதுமக்கள் துணிச்சலுடன் அந்த காரை மடக்கிப்பிடித்தனர். அப்போது காரில் இருந்த 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
ஆனால் காரை ஓட்டி வந்த டிரைவர் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டார். பொதுமக்கள் அவரை பிடித்து சின்ன காஞ்சீபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டிவந்தவர் குன்றத்தூரை சேர்ந்த சிலம்பரசன்(வயது 32) என்பது தெரியவந்தது.
டிரைவர் கைது
மேலும், அந்த காரில் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வைரவன் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரும் வந்ததும், பொதுமக்கள் காரை மடக்கிப்பிடித்தவுடன் அவர்கள் தப்பி சென்றதும் தெரியவந்தது. ரவுடி வைரவன் மீதான வழக்கு காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருவதால் அதில் ஆஜராக அவர்கள் காரில் வந்ததாகவும் பிடிபட்ட டிரைவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்து அவரிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர். அந்த காரை சோதனை செய்தபோது அதில் அரிவாள்கள் மற்றும் கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய பிரபல ரவுடி உள்பட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.