கடலூரில் அரசு மருத்துவர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூரில் அரசு மருத்துவர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவை கைவிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட தலைவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்கள் காரல், வினோத்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ரூபாவதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சத்தியராஜ் , மாவட்ட துணை செயலாளர் ராஜ்விஜய் ஆகியோர் முன்னிலை வகித் தனர். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்கள் கேசவன், புலிகேசி, ஆறுமுகம், ராமச்சந்திரன், சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அரசு மருத்துவ அலுவலர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மக்களின் சுகாதார உரிமைகளை பாதுகாக்கவும், சுகாதார நிலையங்களை தனியாருக்கு குத்தகை விடுவதை தடுக்கவும், தமிழ்நாட்டு இடஒதுக்கீட்டில் உள்ள முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்களில், அரசு மருத்துவ நிலையங்களுக்கு 50 சதவீத உள் ஒதுக்கீடு செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீராமன் நன்றி கூறினார்.