சோழிங்கநல்லூரில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கற்பழிப்பு கணவரின் நண்பர் கைது

சோழிங்கநல்லூரில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-03-16 22:45 GMT
சோழிங்கநல்லூர்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவை சேர்ந்தவர் இஸ்மாயில் மியா (வயது 25). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர் திரிபுராவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலைப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

தனியாக இருந்தார்

இஸ்மாயில் மியாவும், அவரது சொந்த ஊரைச்சேர்ந்த ஜஹாங்கீர் உசேன் (வயது 24) என்பவரும் நண்பர்கள். ஜஹாங்கீர் உசேன் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் ஜஹாங்கீர் உசேன் அடிக்கடி இஸ்மாயில் மியா வீட்டிற்கு வந்து செல்வார்.

இஸ்மாயில் மியா நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்றதால், வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த ஜஹாங்கீர் உசேன் இஸ்மாயிலின் மனைவியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். அதன்படி அவர் தண்ணீர் எடுக்க உள்ளே சென்றதும், வீட்டுக்குள் வந்த ஜஹாங்கீர் கதவை தாழிட்டு விட்டு திடீரென அவரை கட்டி பிடித்துள்ளார்.

கொலை மிரட்டல்

பின்னர் அவரது வாயை பொத்திவிட்டு வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது. இதுபற்றி யாரிடமும் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இரவில் வீட்டுக்கு வந்த இஸ்மாயில் மியாவிடம், இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அவரது மனைவி எடுத்துக் கூறினார்.

இது குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஜஹாங்கீரை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் இஸ்மாயிலின் மனைவியை கற்பழித்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஜஹாங்கீர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்