கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது மத்திய மந்திரி பேட்டி

கர்நாடகத்தில், பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி தாவர் சந்த் கெலாட் கூறினார்.;

Update: 2018-03-16 22:00 GMT
கோலார் தங்கவயல்,

கர்நாடகத்தில், பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி தாவர் சந்த் கெலாட் கூறினார்.

பூத் கமிட்டி கூட்டம்

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள ஜார்ஜ் மன்னர் அரங்கில் நேற்று பா.ஜனதா கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து மத்திய சமூகநலத்துறை மந்திரி தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:-

சட்டசபை தேர்தலையொட்டி கோலார் தங்கவயலில் அமைக்கப்பட்டு உள்ள 232 பூத்களிலும் தொண்டர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி பா.ஜனதாவுக்கு வாக்களிக்கும்படி செய்ய வேண்டும். பா.ஜனதா வெற்றிக்காக தொண்டர்கள் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமக்கா, சம்பங்கி, மாவட்ட பா.ஜனதா துணை தலைவர் சுரேஷ் நாராயணன், மாவட்ட குடிசை வாரிய பிரிவு தலைவர் விஜயகுமார், துணை தலைவர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்து சொல்ல விரும்பவில்லை

முன்னதாக பி.இ.எம்.எல். தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் தங்கும் விடுதியில் தாவர் சந்த் கெலாட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. கோலார் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற தொண்டர்கள் இப்போது இருந்தே முழு மூச்சுடன் செயல்பட வேண்டும் என்றார்.

மாநில அரசு குறித்து வீரப்ப மொய்லி எம்.பி. பதிவு செய்து உள்ள டுவிட்டர் கருத்து குறித்து அவரிடம் நிருபர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு தாவர் சந்த் கெலாட் பதில் அளிக்கையில், மாநில அரசு குறித்து வீரப்ப மொய்லி எம்.பி. பதிவு செய்து உள்ள டுவிட்டர் குறித்து கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.

அவருடைய டுவிட்டர் கருத்துக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் கருத்துகளை கூறிவிட்டார்கள். காங்கிரசின் உட்கட்சி பிரச்சினை குறித்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது என்று கூறினார்.

மேலும் செய்திகள்