பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு விவசாயம் ஒட்டுமொத்தமாக அழியும் என எச்சரிக்கை

பெரியாறு அணையில் இருந்து மதுரை நகருக்கு குடிநீர் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் ஒட்டு மொத்தமாக அழியும் என கூறினர்.

Update: 2018-03-16 22:45 GMT
மதுரை,

மதுரை மாநகர் பகுதிக்கு தற்போது வைகை அணையில் இருந்து முதல் மற்றும் 2–ம் கட்ட குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி வைகை அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு 115 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதி விரிவாக்கம் செய்யப்பட்ட காரணத்தால் இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே மதுரை நகருக்கு தேவையான தண்ணீரை எங்கிருந்து கொண்டு வரலாம் என்று மாநகராட்சி பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தியது.

இறுதியாக பெரியாறு அணையின் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 125 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக ரூ.1,140 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசும் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் தந்துள்ளதால், அதன் ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி உள்ளன. இந்த திட்டத்திற்காக 56 இடங்களில் குடிநீர் தொட்டிகள் கட்டப்படுகின்றன.

எனவே இந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த மாநகராட்சி முடிவு செய்ததது. அதன்படி இந்த கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் முன்னிலை வகித்தார். கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். நகர பொறியாளர் மதுரம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், பெரியாறு பாசன பகுதி விவசாயிகள், குடியிருப்போர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன், திட்டம் குறித்து காணொலி திரை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின் பேசிய விவசாயிகள், இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். அப்போது அவர்கள் கூறும் போது, ‘‘பெரியாறு அணை விவசாயத்திற்காக கட்டப்பட்டது. எனவே குடிநீருக்கு அங்கிருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது. ஏற்கனவே பெரியாறு அணையில் இருந்து விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை நகருக்கும் குடிநீர் எடுத்தால் மதுரை மாவட்டத்தில் விவசாயம் ஒட்டு மொத்தமாக அழியும். மதுரை நகருக்கு தண்ணீர் வேண்டுமென்றால் மாடக்குளம் உள்பட நகரை சுற்றியுள்ள கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் சேமிக்க வேண்டும். அதைவிடுத்து, பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது‘‘ என்று கூறினர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறும் போது, மதுரை நகரம் தொழில் நகரம் ஆகிறது. எனவே அதிக அளவில் மக்கள் மதுரைக்கு இடம் பெயர்வார்கள். இதனை கருத்தில் கொண்டும், மதுரை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காகவும் பெரியாறு அணையில் தண்ணீர் எடுப்பது அவசியம் என்றனர்.

மேலும் செய்திகள்