கடையம் அருகே பரபரப்பு: அங்கன்வாடி உதவியாளர் தீக்குளிப்பு பெண் அதிகாரி நெருக்கடியா? போலீசார் விசாரணை

கடையம் அருகே அங்கன்வாடி உதவியாளர் தீக்குளித்தார். அவருக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-03-16 20:30 GMT
அம்பை,

கடையம் அருகே அங்கன்வாடி உதவியாளர் தீக்குளித்தார். அவருக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் அதிகாரி கொடுத்த நெருக்கடியால் அவர் தீக்குளித்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அங்கன்வாடி உதவியாளர்


நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காமராஜ்நகரைச் சேர்ந்த ஆதிலிங்கம் மகள் சுமதி (வயது 35). இவருக்கும், கடையம் அருகே உள்ள வாகைகுளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுமதியின் கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில் சுமதிக்கு, கணவர் ஊரான வாகைகுளத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அங்கன்வாடி மைய உதவியாளராக வேலை கிடைத்தது. அவர் விதவை என்பதால் கலெக்டர் நேரடியாக சுமதிக்கு இந்த வேலையை வழங்கியதாக தெரிகிறது. செப்டம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்த பிறகு சுமதி ஒரு மாத சம்பளம் மட்டுமே வாங்கினார். அதன்பிறகு அவர் வேலைக்கு செல்லவில்லை. அங்கன்வாடி உதவியாளராக வேலை கிடைத்ததற்கு உயர் பெண் அதிகாரி ஒருவர் சுமதியிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

தீக்குளிப்பு

ஏற்கனவே கணவரை இழந்து தவித்த சுமதிக்கு, அதிகாரி பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் அவர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளானார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இந்தநிலையில் கடந்த 12–ந் தேதி தனது பெற்றோர் வீட்டில் சுமதி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமதியை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சுமதியின் உடலில் 70 சதவீதம் தீக்காயம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

சுமதி தீக்குளிப்பு குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுமதியிடம் பணம் கேட்டு பெண் அதிகாரி நெருக்கடி கொடுத்தாரா? அல்லது மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த சுமதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாதர் சங்கம் போராட்ட அறிவிப்பு

இதற்கிடையே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் பழனி, செயலாளர் கற்பகம், பொருளாளர் சங்கரவடிவு ஆகியோர் நேற்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் சுமதியை நேரில் பார்த்தனர். அவருடைய உறவினர்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர்.

பின்னர் அவர்கள் இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், சுமதி தற்கொலை முயற்சி சம்பவத்துக்கு குழந்தைகள் நல அதிகாரியே காரணம். கலெக்டரால் நேரடியாக நியமிக்கப்பட்ட சுமதியை போன்ற பெண்களை அந்த அதிகாரி அவதூறாக பேசி உள்ளார். வேலைக்கு சேர்வதற்கு பணம் தர வேண்டும் என்று மிரட்டி உள்ளார். கடையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவரும் அதிகாரியால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உடனடியாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் போலீஸ்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாதர் சங்கங்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்