தமிழ் முதல் தாளை 9 ஆயிரத்து 54 மாணவ-மாணவிகள் எழுதினர் 127 பேர் வரவில்லை

பெரம்பலூர் மாவட்டத் தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தமிழ் முதல் தாள் தேர்வை 9 ஆயிரத்து 54 மாணவ-மாணவிகள் எழுதினர். 127 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2018-03-16 23:15 GMT
பெரம்பலூர்,

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 37 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணியில் இருந்தே மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். சில மாணவர்களை பெற்றோரே அழைத்து வந்து பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை பரிசளித்து வாழ்த்து கூறி மையத்தில் விட்டு சென்றனர்.

பின்னர் தேர்வு மைய வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்து தாங்கள் படித்ததை கடைசியாக ஒருமுறை மாணவ, மாணவிகள் திருப்பி பார்த்தனர். இதற்கிடையே மாணவ, மாணவிகளை சந்தித்த வகுப்பு ஆசிரியர்கள், பதற்றமடையாமல் தெரிந்த கேள்விகளுக்கு விடையளித்து நன்றாக தேர்வு எழுதுங்கள் என்று அறிவுரை வழங்கினர். ஆசிரியர்களிடம் மாணவ, மாணவிகள் ஆசி பெற்றனர். பின்னர் காலை 9.30 மணியளவில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தின் போது, தேர்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. அப்போது காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல் களில் ஈடுபட்டால் தண்டனை கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தேர்வறைக்கு சென்ற மாணவ, மாணவிகள் விடைத்தாளில் வரிசை எண் எழுதுவது, பெயர்-விவரம் சரிபார்ப்பது உள்ளிட்டவை முடிந்ததும் வினாத்தாள் அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அதனை 5 நிமிடம் பொறுமையாக வாசித்த மாணவ, மாணவிகள் காலை 10.15 மணியளவில் மணி சத்தம் ஒலித்ததும் ஆர்வத்துடன் தேர்வு எழுத ஆரம்பித்தனர். தேர்வு மையத்திற்குள் வெளிஆட்கள் யாரும் புகுந்து விடாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்தனர். தேர்வு மையத்தில் குடிநீர்வசதி, கழிப்பறை வசதி, தடையின்றி மின்சார வசதி உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டிருந்தன.

இதில் முதன்மை கண் காணிப்பாளர்களாக 37 தலைமை ஆசிரியர்களும், கூடுதல் முதன்மை கண் காணிப்பாளர்களாக 2 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர்களாக 37 பேரும், கூடுதல் துறை அலுவலர்களாக 4 பேரும், அறை கண்காணிப்பாளர்களாக 480 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பெரம்பலூர் மற்றும் எசனை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட் டிருந்த தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். அப்போது தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? என்பது குறித்தும், தேர்வு எழுதுவதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதும் இடத்திற்கு சென்ற கலெக்டர், அவர்களுக்கு சிரமம் ஏதும் இருக்கிறதா? என்று விசாரித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழிதேவி, பெரம்பலூர் தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலு வலர்கள் உடனிருந்தனர்.

மாவட்டம் முழுவதும் 37 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுத 4 ஆயிரத்து 947 மாணவர்கள், 4 ஆயிரத்து 234 மாணவிகள் என மொத்தம் 9 ஆயிரத்து 181 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில் தமிழ் முதல் தாள் தேர்வை 9 ஆயிரத்து 54 பேர் எழுதினர். 77 மாணவர்கள், 50 மாணவிகள் என 127 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் 186 தனித்தேர்வர்களில் 164 பேர் தேர்வு எழுதினர். 22 பேர் தேர்வு எழுத வரவில்லை.

குரும்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழிதேவி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தேர்வறையில் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் ஏதும் பயன்பாட்டில் இருக்கிறதா? என பார்வையிட்டனர். இதே போல் மாவட்ட கல்வி அதிகாரி பிருதிவிராஜன் உள்பட அதிகாரிகளும் தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.

தேர்வு மையங்களில் துண்டு சீட்டு வைத்திருத்தல், விடைத்தாள்-வினாத்தாளை பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம், காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடு படும் மாணவ, மாணவிகளை கண்டுபிடிக்க 52 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வு மையங்களை கண்காணித்தனர். எனினும் தமிழ் முதல் தாள் தேர்வு என்பதால் யாரும் பிடிபடவில்லை.

சரியாக 12.45 மணியளவில் தேர்வு நிறைவடைந்ததும் மாணவர்கள் விடைத்தாளை, அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்தனர். பின்னர் சந்தேக வினாக்கள் குறித்து ஆசிரிய, ஆசிரியைகளிடம் கேட்டு தெளிவுபெற்றனர். பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்வு எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பார்வை குறைபாடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் ஆசிரிய, ஆசிரியைகள் உதவியுடன் தேர்வு எழுதினர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் 20-ந்தேதி நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்