அய்யாக்கண்ணு பிரசாரத்திற்கு எதிர்ப்பு: பா.ஜனதா கட்சியினர் கருப்பு கொடியுடன் போராட்டம்

தேவகோட்டையில் அய்யாக்கண்ணு பிரசாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா. ஜனதா கட்சியினர் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-03-16 22:45 GMT
தேவகோட்டை,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கன்னியாகுமரி முதல் சென்னை வரை விவசாயிகளுடன் விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் நதிகள் இணைப்பு குறித்த துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்து வருகிறார். இதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் இந்த பிரசாரத்தை மேற்கொண்டார். தேவகோட்டையை அடுத்த புளியால் மற்றும் கண்ணங்குடி ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

நேற்று மதியம் தேவகோட்டை பஸ் நிலையம் மற்றும் தியாகிகள் பூங்கா ஆகிய பகுதிகளுக்கு வந்த அய்யாக்கண்ணுவிற்கு ஏராளமான விவசாயிகள் வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்களுக்கு அவர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் உள்ள அரசு வளமான இந்தியா, வலிமையான இந்தியா என்று சொன்னார்கள். தேர்தல் வாக்குறுதியின்போது விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபகரமான விலையை கொடுப்போம். நதிகளை இணைப்போம் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் தேர்தலில் வெற்றி தற்போது 4 ஆண்டுகள் கடந்தும் எதையும் அவர் செய்யவில்லை.

மரபணு மாற்றப்பட்ட விதைகளால் இளைஞர்கள், கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. பிரதமரும், முதல்-அமைச்சரும் இதுபற்றி எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிரதமர் வீட்டின் முன்பு தூக்குப்போட்டு சாவோம். அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.14 ஆயிரத்து 700 கோடி ஏற்றிக் கொடுக்கின்றனர். ஆனால் 3 கோடி விவசாயிகளுக்கு ரூ.1,950 கோடி கடனை தள்ளுபடி செய்ய மறுக்கின்றனர். கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்றால் விவசாயிகளின் பேரன், பேத்தி, மகன், மகள் என அனைவரும் கடைசி வரை கடனாளியாக தான் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் அய்யாக்கண்ணுவை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது அங்கு ப. ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் வந்தனர். அவர்கள் கருப்பு கொடியுடன் அய்யாக்கண்ணுவுக்கு எதிராக கோஷம் போட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த விவசாயிகள் மற்றும் தி.மு.க.வினர் அய்யாக்கண்ணுவிற்கு ஆதரவாக கோஷம் போட்டனர். மேலும் பா.ஜனதா கட்சியினரை கண்டித்து சில விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்யப் போவதாக அய்யாக்கண்ணுவிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

பின்னர் அய்யாக்கண்ணு, அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசாரிடம் நாங்கள் அனுமதி பெற்று பிரசாரம் செய்து வருகிறோம். எங்களை பா. ஜனதா கட்சியினர் தரக்குறைவாக பேசி போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர். 

மேலும் செய்திகள்