திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள், மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2018-03-16 22:00 GMT
திண்டுக்கல்,

தமிழ்நாடு அரசு டாக்டர்கள், மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க தலைவர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்தங்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பை கலைத்துவிட்டு புதிதாக கொண்டு வரப்பட இருக்கும் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சங்கர் பிரசாத், திண்டுக்கல் சுகாதார மாவட்ட மருத்துவ அலுவலர் சங்க செயலாளர் மந்த்ரேஷ், பழனி சுகாதார மாவட்ட மருத்துவ அலுவலர்கள் சங்க செயலாளர் கோகுல், மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க பொருளாளர் திருலோகசந்திரன் உள்பட ஏராளமான டாக்டர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்