பழனி மலைப்பகுதியில் வெளியாட்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும், நக்சலைட் சிறப்பு பிரிவினர் அறிவிப்பு

பழனி மலைப்பகுதியில் வெளியாட்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என மலைவாழ் மக்களிடம் நக்சலைட் சிறப்பு பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Update: 2018-03-16 22:00 GMT
பழனி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெளியாட்கள், நக்சலைட்டுகள் நடமாட்டத்தை தடுக்க அதிரடிப்படை, நக்சலைட் சிறப்பு அலுவலர் பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நக்சலைட் சிறப்பு பிரிவை சேர்ந்தவர்கள் மலையோர கிராமங்களில் வசிப்பவர்களிடமும், மலைவாழ் மக்களிடமும் நட்புறவுடன் பழகி வெளியாட்கள், நக்சலைட் நடமாட்டம் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்வார்கள்.

மேலும் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பழனியை அடுத்த ஆண்டிப்பட்டி அருகே உள்ள மண்திட்டு பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நக்சலைட் சிறப்பு பிரிவினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து ரூ.42 ஆயிரத்து 830 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மலைவாழ் மக்களுக்கு வழங்கினர். அதில் பிளாஸ்டிக் டிரம், பாய் உள்ளிட்ட பல்வேறு வகையான அத்தியாவசிய பொருட்கள் இருந்தன. பின்னர் மலைவாழ் மக்களிடம் நக்சலைட் சிறப்பு அலுவலர் பிரிவு ஆய்வாளர் முருகன் மற்றும் அதிகாரிகள் பேசினர்.

அப்போது, மலைப்பகுதியில் வெளியாட்கள், நக்சலைட்டுகள் நடமாட்டத்தை தடுக்க உங்கள் உதவி அவசியம். எனவே மலைப்பகுதியில் சந்தேகப்படும்படி யாரேனும் நடமாடினால் தங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்