உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்தது
உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தளி,
உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கிருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளை நீராதாரமாக கொண்ட இந்த அருவிக்கு மழைகாலங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகின்றது.
பஞ்சலிங்க அருவியின் இயற்கை சூழலை ரசிக்கவும் அதில் குளித்து மகிழவும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்தமழை பெய்ததால் அருவியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
அத்துடன் கடந்த சில மாதங்களாக அருவியில் நிலையான நீர்வரத்து இருந்து வந்தது. இதனால் சுற்றுலாபயணிகள் அதிக அளவில் திருமூர்த்தி மலைக்கு வந்து பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மலைப்பகுதியில் உள்ள சிற்றாறுகள் மூலமாக பஞ்சலிங்க அருவிக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரின் அளவும் குறைந்துவிட்டது.
இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். மேலும் அருவியில் குளிப்பதற்காக வருகின்ற வெளிமாநில சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக குறைந்து விட்டதால், பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.