ஊழியரை கத்திமுனையில் மிரட்டி பெட்ரோல் பங்கில் ரூ.3 லட்சம் கொள்ளை

திருச்சி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை கத்திமுனையில் மிரட்டி, ரூ.3 லட்சத்தை மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2018-03-16 22:30 GMT
திருச்சி,

திருச்சி மணிகண்டம் அம்பேத்கர் நகர் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் பகல் நேரத்தில் 4 ஊழியர்களும், இரவு நேரத்தில் 4 ஊழியர்களும் பணியில் இருப்பார்கள். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த ஊழியர் மணிகண்டன்(வயது 19), கேஷியர் பரமசிவம் உள்பட 4 பேர் பணியில் இருந்தனர். இரவுநேரத்தில் குறைந்த அளவே வாகனங்கள் பெட்ரோல் போட வரும் என்பதால், மணிகண்டனை தவிர மற்ற 3 பேரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் அதிகாலை 3.30 மணி அளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

அவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய நபர் ஹெல்மெட் அணிந்தும், பின்னால் அமர்ந்து இருந்த நபர் முகமூடி அணிந்தும் இருந்தனர். அவர்கள் ரூ.100-க்கு பெட்ரோல் போட்டுவிட்டு, ரூ.500-ஐ கொடுத்து சில்லறை கேட்டனர். ஊழியர் மணிகண்டன் பணத்தை வாங்கி கொண்டு கல்லாப்பெட்டியை திறந்து சில்லறை எடுக்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த நபர் திடீரென இறங்கிச்சென்று, மணிகண்டன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரை தனியாக அழைத்துச்சென்றார்.

அதேநேரத்தில் அங்கு மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி மேலும் 2 பேர் வந்தனர். அவர்களில் பின்னால் அமர்ந்திருந்த நபர் கீழே இறங்கி, பெட்ரோல் பங்க் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்தை எடுத்து வேக, வேகமாக ஒரு பையில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறினார். இதையடுத்து மணிகண்டனை கத்தியை காட்டி மிரட்டிய நபரும் ஓடி வந்து, அங்கு தயாராக இருந்த மற்றொரு நபரின் மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்தார். இதையடுத்து இரு மோட்டார் சைக்கிள்களில் 4 பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் ஓடிச்சென்று, அங்கு தூங்கிக்கொண்டு இருந்த கேஷியர் பரமசிவம் மற்றும் ஊழியர்களை சத்தம் போட்டு எழுப்பினார். அவர்கள் எழுந்து வந்து நடந்த சம்பவத்தை கேட்டறிந்து, உடனே இதுகுறித்து மணிகண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நவல்பட்டு இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த கேமராவில் அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்ததும், இவர்களில் 3 பேர் ஹெல்மெட் அணிந்து இருந்ததும், ஒருவர் மட்டும் முகமூடி அணிந்து இருந்ததும் தெரியவந்தது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரும் அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்து, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். திருச்சி அருகே அதிகாலை பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.3 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்