துப்பாக்கி முனையில், ரியல் எஸ்டேட் அதிபரிடம் நகை, பணம் கொள்ளை

ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் ரியல் எஸ்டேட் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை 15 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-03-16 23:30 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் உள்ளது அத்திப்பள்ளி. இந்த ஊரைச் சேர்ந்தவர் நாகராஜ் ரெட்டி (வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் குடும்பத்துடன் அத்திப்பள்ளியில் ஷாகம்பரி லேஅவுட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல பணி முடிந்து வீட்டிற்கு வந்த நாகராஜ்ரெட்டி குடும்பத்தினருடன் இரவு தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் 3 கார்களில் 15 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் நாகராஜ் ரெட்டியின் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். சத்தம் கேட்டு எழுந்து வந்த நாகராஜ் ரெட்டியை அந்த கும்பல் துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள். வீட்டில் உள்ள நகை, பணம் ஆகியவற்றை தர வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் உள்ள அனைவரையும் சுட்டு கொன்று விடுவோம் என்று அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டினார்கள்.

இதனால் பயந்து போன நாகராஜ் ரெட்டி வீட்டில் இருந்த நகை, வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை எடுத்து அந்த கும்பலிடம் கொடுத்தார். மேலும் வீட்டில் இருந்த தங்க, வெள்ளி நகைகள், நிலம் தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை அந்த கும்பல் கொள்ளையடித்தது. பின்னர் அவர்கள் தாங்கள் வந்த கார்களில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து நாகராஜ் ரெட்டி அத்திப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அத்திப்பள்ளி சர்க்கிள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு நாகராஜ் ரெட்டி மற்றும் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை, ரொக்கம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். கொள்ளையர்கள் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் முக்கிய ஆவணங்களை கொள்ளையடிக்க வந்ததும், அவர்கள் அனைவரும் தெலுங்கு மொழி பேசியதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் கொள்ளை போன நகை மற்றும் பணம், ஆவணங்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்