எளிமையாக காவிரி ஆற்றை கடந்து செல்லும் கிராம மக்கள்

காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் நாகமரை பரிசல் துறையில் இருந்து கிராம மக்கள் எளிமையாக காவிரி ஆற்றை கடந்து பண்ணவாடிக்கு செல்கின்றனர்.

Update: 2018-03-16 23:00 GMT
ஏரியூர்,

மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதிகள், தர்மபுரி, சேலம் மாவட்டத்தின் எல்லைகளை இணைக்கிறது. காவிரி ஆற்றின் இடது புறத்தில் நாகமரை, நெருப்பூர், ஏரியூர், இராமகொண்டள்ளி, செல்லமுடி, பென்னாகரம் மற்றும் வலது பகுதியில் மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி உள்ளிட்ட கிராமங்களும் இருந்து வருகின்றன. இந்த இரண்டு மாவட்டத்தின் எல்லைகளை காவிரி ஆற்றை கடந்தால், எளிமையாக செல்லமுடியும், இல்லையென்றால் பல கிலோ மீட்டர் சுற்றி வரும் நிலையிருக்கும்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தால், இந்த நாகமரை, பண்ணவாடி பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும். மேட்டூர் அணையானது தனது முழு கொள்ளளவையும் எட்டும் பட்சத்தில், இந்த பகுதிகளில் காவிரி ஆற்றிலிருந்து இருபுறமும் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் நாகமரை, பண்ணவாடி பரிசல் துறையில், தர்மபுரி, சேலம் மாவட்டங்களுக்கு காவிரி ஆற்றை கடந்து செல்லும் உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகள், சுமார் 5 கி.மீ தூரம் பரிசலில் பயணம் செய்வர். இந்த பரிசல் பயணம் தண்ணீர் குறைவாக வரும் காலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி இருக்கும். நீர்வரத்து அதிகமாக இருந்தால், நேரம் குறைக்கப்படும்.

இந்த நாகமரை, பண்ணவாடி பரிசல் துறையில் இதுவரையில் காவிரி ஆற்றை மக்கள் எளிமையாக கடந்த சென்றதாக வரலாறே கிடையாது. வற்றாத நீராக இருக்கும். எப்போதும் தண்ணீர் தேங்கியே நிற்பதால், கரையை தாண்டி விட பரிசல் ஓட்டும் தொழிலை பிரதானமாக இந்த பகுதி மக்களில் ஒரு சிலர் அரசு டெண்டர் எடுத்து செய்து வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதன் காரணமாகவும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மறுத்ததாலும், தற்போது காவிரி ஆறு தண்ணீர் இல்லாமல் வறண்டு வருகிறது.

இதனால் தர்மபுரி, சேலம் மாவட்ட பகுதிகளுக்கு ஆற்றை கடந்து செல்பவர்கள் மிகவும் எளிமையாக ஆற்றை கடந்து செல்கின்றனர். நாகமரையிலிருந்து காவிரி ஆறு வரை ஷேர் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆட்களை ஏற்றி சென்று காவிரி ஆறு வரை செல்கிறது. பின்னர் பரிசலில் பண்ணவாடி செல்கின்றனர்.பண்ணவாடியிலிருந்து காவிரி ஆறு வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்வதால், மக்கள் காவிரி ஆற்றை கடக்க எந்த ஒரு சிரமமுமின்றி எளிமையாக சென்று வருகின்றனர்.

காவிரி ஆற்றை மிக எளிமையாக கடப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட, காவிரி ஆறு வறண்டு கிடப்பது மிகுந்த வேதனையளிப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்