திருவண்ணாமலையில் தலை துண்டாகி தண்டவாளத்தில் கிடந்த கல்லூரி மாணவர் காதல் தோல்வியால் தற்கொலையா? போலீஸ் விசாரணை

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர் தலை துண்டாகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர், காதல் தோல்வியால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-15 22:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. அவரது மகன் ஏழுமலை (வயது 19). இவர், திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் காலையில் பேப்பர் போடும் வேலையும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக ஏழுமலை வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார். இதற்கிடையில் திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் மோதி தலை துண்டான நிலையில் வாலிபர் பிணம் கிடப்பதாக தகவல் பரவியது. அங்கு சென்று பொதுமக்கள் பார்த்தபோது இறந்து கிடந்தது ஏழுமலை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஏழுமலையின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏழுமலையின் உறவினர்கள், ஏழுமலையின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் சம்பவ இடத்தில் தலை துண்டாகி இறந்து கிடந்த ஏழுமலையின் உடல் தண்டவாளத்திலும், தலை தனியாகவும் கிடந்தது. இதனால் அவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விழுப்புரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏழுமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைதுண்டாகி இறந்த ஏழுமலையின் செல்போன் வாட்ஸ் அப்பில் எனக்கு எல்லா நண்பர்களையும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. ஆனால் யாரையும் பார்க்க முடியவில்லை. அதனால் நாளை (இன்று) என்னை வந்து அனைவரும் பாருங்கள் என்றும் 2 பொம்மைகள் அழுவது போன்று அவர் பதிவிட்டு இருந்ததாக அவரது நண்பர்கள் கூறினர்.

காதல் தோல்வியால் ஏழுமலை ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்