வந்தவாசி அருகே விவசாயி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
வந்தவாசி அருகே விவசாயி வீட்டில் 13 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா மேல்மா கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 35), விவசாயி. இவருடைய மனைவி வசந்தி (32). இவர்களுடைய வீட்டுக்கு முன்புற கதவு மற்றும் வீட்டினுள் உள்ள அறைகளுக்கு கதவுகள் இல்லை. வீட்டினுள் உள்ள ஒரே ஒரு அறைக்கு மட்டும் தான் கதவு உள்ளது.
சம்பவத்தன்று வேலாயுதம் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டினுள் ஜன்னல் அருகே உள்ள ஒரு டப்பாவில் வைத்து விட்டு சொந்த வேலையாக செய்யாறு சென்றார்.
அப்போது வெளியில் சென்றிருந்த அவருடைய மனைவி வசந்தி வீட்டுக்கு சென்றவர், வழக்கம்போல் அந்த டப்பாவில் இருந்து சாவியை எடுத்து அறை கதவின் பூட்டை திறந்து உள்ளே சென்றார்.
பின்னர் நகைகளை அடகு வைப்பதற்காக பீரோவை திறந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போய் இருந்தது. மர்ம நபர்கள் அங்கிருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தி கணவருக்கு தகவல் தெரிவித்தார். திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.2½ லட்சம் இருக்கும்.
இதுபற்றி வேலாயுதம் வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் திருமால், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் மேல்மா கிராமத்திற்கு சென்று நகைகள் மாயமான வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.