அ.தி.மு.க. பிரமுகரை கொலை செய்ய திட்டம்; 7 பேர் கைது

உப்பளத்தில் அ.தி.மு.க. பிரமுகரை கொலை செய்யும் திட்டத்துடன் பதுங்கி இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-15 23:01 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி உப்பளம் உடையார்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டவுடன் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. ஆனால் அதற்குள் அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் உடையார்தோட்டம் பகுதியை சேர்ந்த ஆனந்து(வயது 23), ஆல்பர்ட்(19), மனோ(23), சூர்யா(21), சந்தோஷ் குமார்(23), அருண்குமார் (20), விஜய்(20) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 அரிவாள்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைதொடர்ந்து அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர்.

அவர்களை முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 23.10.2017 அன்று அந்த பகுதியை சேர்ந்த சின்னசெல்வம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான சக்திவேல் மற்றும் அவரது தரப்பினரை கொலை செய்யும் நோக்கில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்கள் 7 பேரையும் போலீசார் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்