மும்பை நகரில் குண்டும்,குழியுமான சாலைகளே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் ஐகோர்ட்டில் அரசு பதில்

குண்டும்,குழியுமான சாலைகளே மும்பையின் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என மராட்டிய அரசு ஐகோர்ட்டில் பதில் அளித்தது.

Update: 2018-03-15 22:35 GMT
மும்பை,

குண்டும்,குழியுமான சாலைகளே மும்பையின் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என மராட்டிய அரசு ஐகோர்ட்டில் பதில் அளித்தது.

பொதுநல வழக்கு


மும்பையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது, அதில் மும்பையில் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் நரேஷ் பாட்டீல் மற்றும் குல்கர்னி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆசுதோஷ் கும்பகோனி, நகரத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு குண்டும் குழியுமான சாலைகளே முக்கியக் காரணம் என தெரிவித்தார்.

சேதமடைந்த சாலைகளை செப்பனிடுவது, பாதசாரிகளுக்கு நடைமேம்பாலங்கள் அமைப்பது, முறைப்படுத்தப்பட்ட வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என மாநில அரசு தரப்பில் பல்வேறு பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு, அவை மும்பை மாநகராட்சியிடம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

82 புதிய வாகனநிறுத்தங்கள்

இதையடுத்து மும்பை மாநகராட்சி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அனில் சாக்ரே, மும்பை முழுவதும் 82 இடங்களில் புதிதாக பல அடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதனால் 59 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் பயனடையும் என அவர் கூறினார்.

தொடர்ந்து அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வாகன நிறுத்தங்கள் நகரத்தில் எங்கெங்கு அமைக்கப்பட உள்ளன என்பதையும், அந்த இடங்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்