கர்நாடகத்தில் இந்துத்துவா கொள்கையை புகுத்த மோடி முயற்சிக்கிறார் முதல்-மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் இந்துத்துவா கொள்கையை புகுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கிறார் என்று முதல்-மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டினார்.

Update: 2018-03-15 22:15 GMT
சிக்கமகளூரு,

கர்நாடகத்தில் இந்துத்துவா கொள்கையை புகுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கிறார் என்று முதல்-மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டினார்.

சாதனை விளக்க பொதுக்கூட்டம்

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் நேற்று கர்நாடக அரசின் 5 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் தொடக்க விழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஒசதுர்காவுக்கு வந்தார்.

அரசு கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வந்து இறங்கிய அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்துத்துவா கொள்கை

கர்நாடகத்தில் லிங்காயத்-வீரசைவ சமுதாயத்தை தனித்தனியாக பிரிக்க மந்திரி சபையில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதை மாநிலத்தில் உள்ள லிங்காயத் மற்றும் வீரசவை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்திலேயே பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. இதன்மூலம் பா.ஜனதாவினர் முகங்களை மக்கள் தெரிந்து கொண்டார்கள் என்பது தெரிகிறது.

கர்நாடகத்தில் இந்துத்துவா கொள்கையை புகுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கிறார். அது நடக்காது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா 100 சதவீதம் தோல்வி அடையும். அது உறுதி. எந்த காலகட்டத்திலும் பா.ஜனதா ஜெயிக்காது.

கட்சி மேலிடம் முடிவு செய்யும்

தேர்தலில் போட்டியிட எனது மகன் யதீந்திரா இதுவரையில் என்னிடம் டிக்கெட் கேட்கவில்லை. தேர்தலில் போட்டியிட யார், யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவராக ஈசுவரப்பா உள்ளார். ஆனால் அவருக்கே வரும் தேர்தலில் டிக்கெட் வழங்க பா.ஜனதா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுப்பார்களா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக பா.ஜனதா தலைவருமான எடியூரப்பா அதிகப்படியான பொய்களை கூறி வருகிறார். காங்கிரஸ் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் என்னதான் சொன்னாலும் அதை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

ரூ.4,200 கோடியில் வளர்ச்சிப்பணிகள்

பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா விழாவில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் ஒசதுர்கா தொகுதியில் ரூ.4,200 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சித்ரதுர்கா மாவட்டத்தில் ஒசதுர்கா தொகுதி மிகவும் முக்கியமான தொகுதியாக கருதப்படுகிறது. இந்த தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோவிந்தப்பா மிகவும் திறமையானவர். இந்த 4¾ வருடத்தில் அவர் ஒசதுர்கா தொகுதிக்கென்று ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி பெற்று கொண்டுவந்துள்ளார்.

ஒரு ரூபாயை கூட செலுத்தவில்லை

சித்ரதுர்கா மாவட்டத்தின் பொறுப்பு மந்திரியாக ஆஞ்சநேயா உள்ளார். அவருடைய தொகுதிக்கு கூட இவ்வளவு நிதி ஒதுக்கப்படவில்லை. பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது நீர்ப்பாசனத் துறைக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இது பா.ஜனதாவினருக்கு நன்றாக தெரியும். இருந்தும் அவர்கள் காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பணத்தை மீட்பேன், அதை வைத்து நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சத்தை செலுத்துவேன் என்று கூறினார். ஆனால் இதுவரையில் ஒரு ரூபாயை கூட அவர் யாருடைய வங்கி கணக்கிலும் செலுத்தவில்லை.

நான் ஒருவன்தான்

தேர்தலையொட்டி மாநிலத்தில் பா.ஜனதாவினர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள். அவர்களுடைய கனவு பலிக்காது. பா.ஜனதா ஆட்சியின்போது அடுத்தடுத்த 20 மாதங்களில் ஒருவர் என்ற கணக்கில் 3 எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்கள். இப்படி ஒரு சாதனையை தன்வசம் வைத்திருப்பது பா.ஜனதா கட்சிதான்.

கர்நாடகத்தில் தேவராஜ் அர்ஸ் ஆட்சிக்கு பிறகு, 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்த ஒரே கட்சி காங்கிரஸ்தான். தேவராஜ் அர்சுக்கு பிறகு 5 ஆண்டுகள் முழுமையாக முதல்-மந்திரியாக இருந்தவனும் நான் ஒருவன்தான்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரி ஆஞ்சனேயா, கோவிந்தப்பா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்