கிணற்றில் மூழ்கி கல்லூரி பேராசிரியர் சாவு

கிணற்றில் மூழ்கி கல்லூரி பேராசிரியர் பரிதாபமாக இறந்தார். திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-03-15 23:15 GMT
திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள குருவராஜபேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார். நேற்று கல்லூரியில் இருந்து வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை.

கல்லூரியில் பணிபுரியும் மற்ற பேராசிரியர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது கல்லூரிக்கு அருகில் உள்ள தரைக்கிணற்றின் அருகே அவர் வைத்து இருந்த அடையாள அட்டை மற்றும் முகவரி குறிப்புகள் இருந்தன.

உடனடியாக அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் மூழ்கி இறந்து கிடந்த செந்தில்குமார் உடலை வெளியே கொண்டு வந்தனர்.

பேராசிரியர் செந்தில்குமாருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்