குடியாத்தத்தில் 2 மோட்டார்சைக்கிள் ஷோரூம்களில் ரூ.78 ஆயிரம் கொள்ளை
குடியாத்தத்தில் 2 மோட்டார்சைக்கிள் ஷோரூம்களில் ரூ.78 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் ஆர்.எஸ்.ரோட்டில் சிவராமன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோரூம் உள்ளது. நேற்று காலையில் ஷோரூமுக்கு ஊழியர்கள் வந்தபோது ஷோரூம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நள்ளிரவில் ஷோரூமின் மாடியின் வழியாக கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தரைத்தளத்தில் இருந்த கதவை உடைத்து பெட்டியில் வைத்திருந்த ரூ.28 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து தடயங்களை அழித்துள்ளனர்.
தொடர்ந்து அருகில் உள்ள ராஜா என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோரூம் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கு பெட்டியில் இருந்த ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.