வேலூர் அருகே வீட்டின் பீரோவில் இருந்த 21 பவுன் நகை திருட்டு

வேலூர் அருகே வீட்டின் பீரோவில் இருந்த 21 பவுன் நகையை திருடி, அதனை வங்கியில் ரூ.3½ லட்சத்துக்கு அடகு வைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-15 22:15 GMT
வேலூர், 

வேலூர் அருகே உள்ள பெருமுகை இந்திராநகரை சேர்ந்தவர் குமரவேல். இவருடைய மனைவி கீதாகுமாரி (வயது 53). பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற குமரவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் மகன் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் கீதாகுமாரி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கீதாகுமாரி கடந்த 11-ந் தேதி மகனை காண பெங்களூரு சென்றார். அப்போது வீட்டை பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜலட்சுமி என்பவரிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை கீதாகுமாரி வீடு திரும்பினார். பின்னர் அவர் பீரோவை திறந்து பார்த்தார். அங்கு வைத்திருந்த 21 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் நகைகள் கிடைக்கவில்லை. இதையடுத்து கீதாகுமாரி, வீட்டின் சாவியை கொடுத்து வைத்திருந்த ராஜலட்சுமியிடம், நகைகள் காணாமல் போனது குறித்து கேட்டார். அதற்கு அவர் தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து கீதாகுமாரி சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதில், ‘எனது வீட்டு கதவின் பூட்டு, பீரோ உடைக்கப்படாமல் உள்ளது. ஆனால் பீரோவில் வைத்திருந்த 21 பவுன் நகைகள் திருட்டு போய் உள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழக்குப்பதிவு செய்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார். அதில், கீதாகுமாரி பெங்களூரு சென்றபோது அவரின் வீட்டு சாவி மூலம் 21 பவுன் நகையை பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜலட்சுமியின் கணவர் கூலித்தொழிலாளியான அரிகுமரன் (44) திருடியதும், அதனை வங்கி ஒன்றில் ரூ.3½ லட்சத்துக்கு அடகு வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அரிகுமரனை கைது செய்தனர். மேலும் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்