சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் ரூ.614.84 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம்

சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் ரூ.614.84 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-03-15 23:30 GMT
தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:-

* சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில், அடிப்படை வசதிகளை வழங்குவதற்காகவும், சாலைகள், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், 2018-2019-ம் ஆண்டு முதல் சென்னைப் பெருநகர வளர்ச்சி இயக்கத்தை அரசு மீண்டும் செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக, 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ், பணிகள் மேற்கொள்ளப்படாத நகரங்களில், நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி இயக்கத்தையும் 2018-2019-ம் ஆண்டு முதல் மீண்டும் இந்த அரசு செயல்படுத்தும். இதற்கென வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்குத் தொகையினை வழங்கி, அம்ருத் திட்டத்தினைச் செயல்படுத்திட, ரூ.4,790 கோடி மதிப்பீட்டில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற முன்னோடி முதலீட்டுத் திட்டத்தினை மாநில அரசு செயல்படுத்தும்.

பாதாள சாக்கடை திட்டம்

* 2018-2019-ம் ஆண்டில், ரூ.200 கோடி மதிப்பீட்டில் நபார்டு வங்கி நிதியுதவியுடன், பேரூராட்சிகளில் உள்ள 400 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளைத் தரம் உயர்த்துவதற்கான மேம்பாட்டுப் பணிகளை இந்த அரசு செயல்படுத்தும்.

* சென்னை மாநகராட்சியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளில், 2018-2019-ம் ஆண்டில் ரூ.614.84 கோடி செலவில் பாதாளச் சாக்கடைப் பணிகள் மேற்கொள்ளப்படும். 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.13,896.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தேசிய ஊரகக் குடிநீர் திட்டத்திற்காக ரூ.300 கோடியும், குறைந்தபட்ச தேவைகள் திட்டத்திற்காக ரூ.186 கோடியும், நபார்டு வங்கி நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்காக ரூ.600 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குடிநீர் வழங்கல் பணிகளுக்காக, மொத்தமாக ரூ.1,853.38 கோடி இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்