மணல் கடத்தலின்போது வருவாய்த்துறையினரை மிரட்டியவர் கைது

மணல் கடத்தலின்போது வருவாய்த்துறையினரை மிரட்டிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் ஊராட்சி தலைவரை தேடி வருகின்றனர்.;

Update: 2018-03-15 22:00 GMT
குடியாத்தம், 

குடியாத்தம் அருகே மோடிகுப்பம் ஊராட்சி கீழ்கொல்லப்பல்லி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உரிய அனுமதியின்றி மணல் எடுப்பதாக வந்த தகவலின்பேரில் மோடிகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மோடிக்குப்பத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 45), என்பவர் டிராக்டரில் மணல் ஏற்றி வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் மணல் கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் டிராக்டரை குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது சீனிவாசனுக்கு ஆதரவாக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஏ.கே.ஜெயப்பிரகாஷ் உள்பட சிலர் டிராக்டர் கொண்டு செல்ல தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் கோபி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்றனர்.

அப்போது சீனிவாசன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினரை மிரட்டி மணலை அங்கேயே கொட்டிவிட்டு டிராக்டரை எடுத்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை சார்பில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபுவிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மோடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசனை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.கே.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்