54 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்

கட்டுமாவடி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 54 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

Update: 2018-03-15 22:45 GMT
திட்டச்சேரி,

திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சியில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே முதன் முறையாக 1969-ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் மக்கள் தொடர்பு முகாம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மாதந்தோறும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு கலெக்டரால், மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களது குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது.

கடந்த மாதம் 13-ந்தேதி நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 120 மனுக்கள் பெறப்பட்டு, உரிய பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 48 மனுக்கள் ஏற்கப்பட்டன. 72 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது இங்கு நடை பெறும் மக்கள் தொடர்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்து 86 மனுக்கள் பெறப்பட்டு உரிய அலுவலர்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை பயன்படுத்தி கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் வருவாய் துறை சார்பில் 27 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் மாதாந்திர உதவித்தொகை திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு தலா ரூ. ஆயிரம் வீதம் மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.51 ஆயிரத்து 454 மதிப்பிலான நுண்ணீர் பாசனத்திட்ட கருவிகளும் என மொத்தம் 54 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

முன்னதாக தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.

இதில் உதவி கலெக்டர் கார்த்திகேயன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) வேலுமணி, தாசில்தார் ராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தமிழ்செல்வன், செபஸ்தியம்மாள், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருட்டிணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மசுந்தரிகலியபெருமாள், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், வெங்கட்ராமன், செந்தில்குமார், பாக்கியராணி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்