கல்லூரி பேராசிரியரிடம் ரூ.1¼ லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.1¼ லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2018-03-15 22:00 GMT
கோவை,

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் வினுமோன் (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வாட்ஸ்- அப் மூலம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் தங்கராஜ் அறிமுகம் ஆனார்.

அவரிடம், கோவை, ஈரோடு, நாமக்கல் பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியர் வேலை கிடைக்குமா என்று வினுமோகன் கேட்டு உள்ளார். அதற்கு தங்கராஜ், எனக்கு தெரிந்த நண்பர் வானதி சுரேந்தர் என்பவர் கோவை வடவள்ளி அருகே நவாவூர் பிரிவில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் சிங்கப்பூரில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளார். எனவே உங்களுக்கு அவர் கண்டிப்பாக சிங்கப்பூரில் பேராசிரியர் வேலை வாங்கிக்கொடுப்பார் என்று கூறி உள்ளார்.

இதை நம்பிய அவர், வடவள்ளியில் தனியார் நிதிநிறுவனம் நடத்தி வரும் வானதி சுரேந்தரை சந்திக்க முடிவு செய்தார். இது பற்றி அவர் தங்கராஜிடம் கேட்டபோது, அவரை நாம் சந்திக்க வேண்டாம், போன் மூலம் பேசினாலே போதும், வேலைவாங்கி கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர் என்று கூறி உள்ளார். அத்துடன் அவரின் செல்போன் எண்ணையும் கொடுத்து உள்ளார்.

அந்த எண்ணுக்கு வினுமோன் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய வானதி சுரேந்தர், தற்போது சிங்கப்பூரில் ஏராளமான பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே உங்களுக்கு கண்டிப்பாக வேலை வாங்கி கொடுக்கிறேன். அதற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். உடனே அவரும் பணம் கொடுப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவர் எனது மகன் ராஜீவுக்கு வடவள்ளி அருகே நாகராஜபுரத்தில் இருக்கும் வங்கியில் கணக்கு உள்ளது. எனவே அந்த கணக்கில் பணத்தை செலுத்தி விடுங்கள் என்று கூறி, அதற்கான எண்ணையும் கொடுத்து உள்ளார். உடனே அவரும் ராஜீவ் கணக்கில் பணம் செலுத்தினார். அந்த பணத்தை எடுத்த வானதிசுரேந்தர், வினுமோனுக்கு வேலைவாங்கிக் கொடுக்க வில்லை. மேலும் அந்த பணத்தை அவர் திரும்பி கொடுக்காமலும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் தங்கராஜிடம் கூறியதற்கு அவரும் எவ்வித பதிலும் சொல்ல வில்லை. பின்னர் அவர் போன் செய்தால் அதை எடுத்து பேசுவதும் இல்லை. எனவே இந்த மோசடி குறித்து வினுமோன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பேராசிரியர் தங்கராஜ், மற்றும் வானதி சுரேந்தர், அவருடைய மகன் ராஜீவ் ஆகிய 3 பேர் மீது மோசடி உள்பட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்