பவானிசாகரில் வரி உயர்வை கண்டித்து கடையடைப்பு போராட்டம்
பவானிசாகரில் வரி உயர்வை கண்டித்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் பேரூராட்சி அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.;
பவானிசாகர்,
பவானிசாகர் பேரூராட்சியில் கடைகளுக்கான வரி கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து வரி உயர்வை கண்டித்து பவானிசாகரில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பவானிசாகரில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார்கள்.
அதன்படி பவானிசாகரில் நேற்று அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் நேற்று காலை 6 மணி முதல் டீக்கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படவில்லை. மருந்து கடைகள், பால் பூத்துகள் மட்டும் திறந்திருந்தன. மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே நேற்று பகல் 11 மணி அளவில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் பவானிசாகர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று கூடினார் கள். பின்னர் வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அலுவலகத்துக்குள் சென்று பேரூராட்சி செயல் அதிகாரியிடம், கடைகளுக்கான வரி உயர்வை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அதன்பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.