மழை எதிரொலி ஊட்டி மலை ரெயில் ஒரு மணி நேரம் தாமதம்

மழை எதிரொலியாக மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.

Update: 2018-03-15 23:15 GMT
குன்னூர்,

சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் இணைப்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு குன்னூரை 10.30 மணிக்கு வந்தடைகிறது. இதன் பின்னர் ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டு செல்கிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் மலை ரெயிலில் பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. மலை ரெயில் மூலமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும்போது இயற்கை காட்சிகளை நன்கு கண்டு களிக்க முடியும் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ரெயில் தண்டவாளம் ஈரத்தன்மையுடன் இருந்தது. நேற்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டது.

கல்லார் ரெயில் நிலையத்தை கடந்து மலை பாதையில் ரெயில் ஏற தொடங்கியது. அடர்லி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு சிறிது தூரம் சென்றபோது பல்சக்கர தண்டவாளத்தில் மழைநீர் இருந்ததால் என்ஜின் சக்கரங்கள் சரிவர சுழலவில்லை.

இதை தொடர்ந்து தண்டவாளத்தில் மணல் போட்டு ரெயிலை இயக்கினர். இந்த நேரத்தில் என்ஜினின் உந்து சக்தியும் குறைவடைந்தது. இதையடுத்து ரெயில் மெதுவாக இயக்கப்பட்டு ரன்னிமேடு- காட்டேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டது. பின்னர் பழுது சரி செய்யப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக குன்னூருக்கு காலை 11.30 மணிக்கு மலை ரெயில் வந்தடைந்தது. அதன் பின்னர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு ஊட்டிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. தாமதம் காரணமாக ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் அவதியடைந் தனர்.

மேலும் செய்திகள்