திண்டுக்கல்லில் தனியார் நிதி நிறுவன கிளைகளில் வருமான வரித்துறை சோதனை
திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிதி நிறுவன கிளைகளில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
கேரள மாநிலம் கோட்டயத்தை தலைமையிடமாக கொண்டு பிரபலமான ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்க நகைகளுக்கு ஈடாக கடன் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கிளைகள் உள்ளன.
முறையாக வரி செலுத்தாமல் வரிஏய்ப்பு செய்ததாக இந்த நிறுவனம் மீது வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நேற்று அந்த நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் உள்ள நிதி நிறுவன கிளைக்கு நேற்று காலை 10 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.
அவர்கள் உள்ளே சென்றவுடன், வெளியே இருந்து வேறு யாரையும் உள்ளே விடக் கூடாது என்று காவலாளிக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் வரி ஏய்ப்பு செய்துள்ளனரா? என ஆவணங்களை சோதனை செய்ய தொடங்கினர். இந்த சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது.
இதேபோன்று ரவுண்டு ரோடு, பழனி ரோடு கிளைகளிலும் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங் களுடன் காரில் புறப்பட்டு சென்றனர்.