திருச்சி அருகே லாரியில் திருடப்பட்ட 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல்
திருச்சி அருகே லாரியில் திருடப்பட்ட 1,600 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி,
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 23). லாரி டிரைவர். கடந்த 6-ந்தேதியன்று இவர், சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் உள்ள குடோனில் இருந்து மதுபான பாட்டில்களை லாரியில் ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் அருகே இருங்களூர் கைகாட்டி பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு இரவு சிறிதுநேரம் தூங்கினார். பின்னர் கண்விழித்து பார்த்தபோது, லாரியில் மதுபான பெட்டிகளை சுற்றி கட்டப்பட்டிருந்த தார்ப்பாய் கிழிக்கப்பட்டிருந்தது. அந்த பெட்டிகளில் இருந்த 1,600 மதுபான பாட்டில்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் தேனி அருகே பூதிப்புரம் வீருசின்னம்மாள்புரத்தில் உள்ள ஒரு வீட்டில், திருச்சி அருகே லாரியில் இருந்து திருடப்பட்ட மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டுக்குள் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன. விசாரணையில், அந்த மதுபாட்டில்களை தேனி கொடுவிலார்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு சென்ற லாரியில் இருந்து மதுபான பாட்டில்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.
அதன்பேரில் மதுபாட்டில் களை பறிமுதல் செய்த பழனிசெட்டிபட்டி போலீசார், அவரை சமயபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.