ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு நாராயண் ரானே போட்டியிடுவது சிவசேனாவுக்கு ஏன் பயத்தை ஏற்படுத்துகிறது

ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் நாராயண் ரானே போட்டியிடுவது சிவசேனாவிற்கு ஏன் பயத்தை ஏற்படுத்துகிறது என்று பா.ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.;

Update: 2018-03-14 22:33 GMT
மும்பை,

ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் நாராயண் ரானே போட்டியிடுவது சிவசேனாவிற்கு ஏன் பயத்தை ஏற்படுத்துகிறது என்று பா.ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜ்யசபா வேட்பாளர்

சிவசேனா கட்சி சார்பில் முதல்-மந்திரி பதவி வகித்தவர் நாராயண் ரானே. பின்னர் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நாராயண் ரானே மராட்டிய சுவாபிமான் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது கட்சி பா.ஜனதாவின், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

இவருக்கு தற்போது பா.ஜனதா சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனை ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா விமர்சித்து உள்ளது. பா.ஜனதாவில் உறுப்பினராக கூட இல்லாத நாராயண் ரானே எப்படி அக்கட்சி சார்பில் ராஜ்ய சபாவிற்கு போட்டியிடுகிறார் என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதில் அளித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராம் கதம் கூறியதாவது:-

தூக்கத்தை கெடுக்கிறது...

நாராயண் ரானே தற்போது பா.ஜனதா கூட்டணியில் தான் உள்ளார். இது சிலரின் இரவு தூக்கத்தை கெடுத்திருப்பதை பார்க்க முடிகிறது. நாராயண் ரானே அவர்களது கட்சியில் (சிவசேனா)் இருந்து விலகி 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரை ராஜ்யசபா வேட்பாளராக நாங்கள் அறிவித்ததற்கு அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

ஒருவேளை சிவசேனாவின் கோட்டையாக உள்ள கொங்கன் பிராந்தியத்தில், நாராயண் ரானேவால் அவர்களின் பிடி தளர்ந்துவிடும் என்பதால் பயப்படுகிறதோ?

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்