மாலேகாவில் இருந்து சரக்கு வேனில் கடத்தி வந்த 500 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

மாலேகாவில் இருந்து மும்பைக்கு சரக்கு வேனில் கடத்திவரப்பட்ட 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-03-14 22:30 GMT
மும்பை,

மாலேகாவில் இருந்து மும்பைக்கு சரக்கு வேனில் கடத்திவரப்பட்ட 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரகசிய தகவல்

மும்பை விக்ரோலிக்கு அதிகளவில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக நேற்றுமுன்தினம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அங்கு வெங்காயம் ஏற்றிய சரக்குவேன் ஒன்று வந்தது. அந்த சரக்குவேனை வழிமறித்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது வெங்காய மூட்டைகளுக்கு மத்தியில் சாக்குப்பைகளில் அதிகளவில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

500 கிலோ கஞ்சா பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா 500 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த சரக்குவேன் டிரைவர் உள்பட 3 பேரை பிடித்தனர்.

அவர்கள் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகாவில் இருந்து கஞ்சாவை கடத்தி கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் நாசிக்கை சேர்ந்த சஞ்சய் மோகிதா(வயது36), காலுமோகிதே(28), ஜல்காவை சேர்ந்த நந்தலால்(55) ஆகியோர் என்பது தெரியவந்தது.

போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்