பல்லாவரம் ரெயில்வே மேம்பாலத்தில் குவிந்து கிடக்கும் மண், குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதி
பல்லாவரம் ரெயில்வே மேம்பாலத்தில் மண், குப்பைகள் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து பழைய பல்லாவரம் பகுதிக்கு ரெயில்வே தண்டவாளத்தை கடந்துசெல்லும் வகையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த ரெயில்வே மேம்பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
ஆனால் இந்த ரெயில்வே மேம்பாலம் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் ரெயில்வே மேம்பாலத்தின் இருபகுதிகளிலும் தடுப்பு சுவர் ஓரமாக மண் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக ரெயில்வே தண்டவாளம் பகுதியில் அமைந்துள்ள பாலத்தின் தடுப்புசுவர் ஓரமாக அதிகளவில் மண், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
வாகன ஓட்டிகள் அவதி
இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, அங்கு குவிந்து கிடக்கும் மண்ணில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த மேம்பாலத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மண்ணில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது.
பலத்த காற்று வீசும்போது குப்பைகள் மற்றும் மண் தூசிகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து விடுவதால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
நடந்து செல்லும் பொதுமக்கள் தண்டவாள பகுதியை கடந்துசெல்ல வசதியாக மேம்பாலத்தையொட்டி படிக்கட்டுகளுடன் கூடிய நடைபாதை உள்ளது. இந்த படிக்கட்டுகளிலும் ஏராளமான குப்பைகள், மண் மற்றும் மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பாலத்தின் வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.
பாலத்தின் கீழ்பகுதியிலும் புதர்மண்டி காணப்படுகிறது. சுகாதார சீர்கேடுகளுடன், இரவு நேரத்தில் இந்த பகுதி இருட்டாகவும் உள்ளதால் அதை பயன்படுத்தி சமூகவிரோத செயல்களும் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே ரெயில்வே மேம்பாலத்திலும், பொதுமக்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பகுதியிலும் குவிந்து கிடக்கும் மண், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து தொடர்ந்து ரெயில்வே மேம்பாலத்தை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.