மீனவ மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே மீனவ மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

Update: 2018-03-14 23:00 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே பெரியகுப்பம் என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்கு வசித்து வரும் 170 குடும்பத்தினர்களுக்கு 1989-ம் ஆண்டு கிராம பட்டா என்ற பெயரில் வீட்டு மனைகளுக்கான பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த பட்டா விவரம் அரசு பதிவேட்டில் இதுவரை ஏற்றப்படவில்லை. எனவே வீட்டு மனைகளுக்கு பட்டா இல்லாத சூழலில் இந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கண்ட கிராமத்தில் உள்ளவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று கட்சியின் ஒன்றியச்செயலாளர் அருள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெரியகுப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட மொத்தம் 200 பேர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதில் மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார். இதுதொடர்பாக கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபாலிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

இதையடுத்து தாசில்தார் ராஜகோபால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக பட்டா வழங்க அரசு தரப்பில் ஏற்கனவே உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுப்பதாக...

மாவட்ட நிர்வாகம் சார்பில், தண்டலச்சேரியில் நடத்தப்பட இருந்த மக்கள் தொடர்பு முகாம் இடம் மாற்றம் செய்யப்பட்டு கூடிய விரைவில் பெரியகுப்பம் கிராமத்தையொட்டி உள்ள சுண்ணாம்புகுளத்தில் நடைபெற உள்ளது.

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பெரியகுப்பம் கிராமத்தில் வீடு உள்ள அனைவருக்கும் வீட்டு மனை பட்டா வழங்கிட அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தாசில்தார் ராஜகோபால் தெரிவித்தார்.

பெரியகுப்பம் மீனவ கிராம மக்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளும் இதை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்