கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-14 22:30 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெரியநத்தம் கிராமம் உள்ளது. இங்கு உள்ள ஒரு வீட்டில் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இங்கிருந்து வாகனங்கள் மூலம் சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கடத்தப்படுவதாகவும் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜனுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

கைது

அப்போது அந்த வீட்டில் 2 டன் எடை கொண்ட 25 செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேற்கண்ட செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த ரங்கநாதன் (வயது 50) மற்றும் அவரது மகன் தங்கராசு (24) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்