ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் ஆலை கழிவுநீரால் பாதிப்பு நடவடிக்கை கோரி கிராம மக்கள் மனு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் ஆலை கழிவுநீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் மனு அளித்துள்ள்ளது.;
விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானத்திடம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேலத்தொட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
மேலத்தொட்டியபட்டி கிராமத்தில் மினரல் வாட்டர் தயாரிக்கும் 2 தனியார் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளின் பயன்பாட்டிற்காக 13–க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டு தினசரி 7 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இந்தநிலத்தடி நீரை சுத்திகரித்து மினரல் வாட்டராக விற்பனை செய்து வருகின்றனர். இந்தஆலைகளில் இருந்து கழிவுநீர் பெரும் அளவில் வெளியேறுகிறது. இந்த கழிவுநீர் செல்வதற்கு முறையான அமைப்புகள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் கழிவுநீர் விளைநிலங்களுக்குள் செல்கிறது. இது பற்றி ஆலை நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாத நிலை நீடிக்கிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு 400–க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் நீர் ஊற்று குறைந்து விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ளோர் நிலத்தடி நீரை பயன்படுத்துவதால் 100–க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொட்டியபட்டி, கம்பத்துப்பட்டி, பெருமாள்பட்டி, மங்காவரம் உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்களும், கிராமமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவேமாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தி ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை விளைநிலங்களுக்குள் செல்லாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து கிராம மக்களையும், விளை நிலங்களையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.