தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்,
சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த 6 மாதமாக 15-ந் தேதிக்கு மேல்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. இதை கைவிட்டு அந்த மாத சம்பளத்தை அந்த மாத இறுதியிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு வட்டக்கிளை தலைவர் ஆண்ட்ரூஸ் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலாளர் முருகேசன், மாவட்ட செயலாளர் ராமசாமி, பொருளாளர் மீனாட்சி, முன்னாள் மாவட்ட செயலாளர் பால்ராஜ், அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை தலைவர் ராஜு, வட்டக்கிளை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
போராட்டத்தின் போது, 2015-ம் ஆண்டில் இருந்து 10 முதல் 35 ஆண்டு வரை பணிமுடித்த சத்துணவு ஊழியர்களுக்கு தேக்கநிலை ஊதியம், நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவில் ஊதியமாற்றம் செய்து, நிலுவையுடன் ஊதியத்தொகையை வழங்க வேண்டும். புதியதாக பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு, 5 மாதமாகியும் ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு புதிய ஊதியம் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்களில் 23 பேருக்கு, மாறுதலாக கூட்டுறவு சங்கத்திற்கு ஊதியம் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்பட்ட தொகை ரூ.92 ஆயிரத்தை, உடனே துறை மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த தொகை மற்றும் இறந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்த தொகை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். சத்துணவிற்கு அரசு வழங்கும் மானியத்தை கொடுப்பதற்கு அமைப்பாளர்களிடம் ரூ.20 பிடித்தம் செய்வதை உடனே நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.